SIVAKASI WEATHER
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 40% குறைந்தது

05-10-2017
28 சதவீத ஜிஎஸ்டி வரியால் கடுமையான பாதிப்பு: சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 40% குறைந்தது

ஆடம்பர பொருட்கள் பட்டியலில் பட்டாசு சேர்க்கப்பட்டு 28 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால் இந்த ஆண்டு பட்டாசு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது பட்டாசுத் தொழில். மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற 178 பட்டாசு ஆலைகள், சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற 152 பட்டாசு ஆலைகள், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனு மதி பெற்ற 437 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 767 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்கள் மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாகக் கூறி தடை விதிக்கப்பட்டதாலும், மழை, வெள்ளம் போன்ற பருவநிலை மாற்றத்தாலும், பட்டாசுக்கு ஜிஎஸ்டியில் 28 சதவீத வரிவிதிக்கப்பட்டதாலும் இந்த ஆண்டு வட மாநில ஆர்டர்கள் குறைந்தன. இதனால், இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்து விட்டது.

பட்டாசு ஆலைகளுக்கு ஆபத்து

சீனாவிலிருந்து ஏராளமான கன்டெய்னர்களில் கள்ளத் தனமாக சீனப்பட்டாசுகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு நெருக்கடிகள் காரணமாக சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன.

வரியை குறைக்க வேண்டும்

பட்டாசுக்கு 28 சதவீத வரி விதிப்பால் எதிர்மறை விளைவுகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கள்ளத்தனமான விற்பனை அதிகரிக்கும் நிலையுள்ளது. இதைத் தடுக்க, பட்டாசுக்கான 28 சதவீத வரியை 18 அல்லது 12 சதவீதமாக குறைக்க வேண்டும். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தால் பல கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும். தரமான மற்றும் விலை குறைந்த பட்டாசு ரகங்களை தயாரிக்க முடியும். பட்டாசுத் தொழிலும் வளரும்.


News & Events
top