SIVAKASI WEATHER
நெருங்கிவிட்டது தீபாவளி பண்டிகை : சிவகாசியில் இறுதிகட்ட பட்டாசு தயாரிப்பு தீவிரம்

09-10-2017
Courtesy: Dinakaran

நெருங்கிவிட்டது தீபாவளி பண்டிகை : சிவகாசியில் இறுதிகட்ட பட்டாசு தயாரிப்பு தீவிரம்

சிவகாசி: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தீமையென்னும் இருளகற்றி இன்ப ஒளியேற்றும் திருநாளாகக் கொண்டாடப்படுவது தீபாவளித் திருநாள். தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பட்டாசுகள். பட்டாசு என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சிவகாசி தான். சிவகாசியில் தான் நம் நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் சுமார் 90 சதவீத பட்டாசு உற்பத்தி செய்யப்படுகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சிவகாசி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலுள்ள ஆலைகளில் பட்டாசு உற்பத்தி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு பட்டாசு தொழிற்சாலையிலும் தற்போது பேன்சிரக வெடி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக, விசில் போன்ற ஒலியெழுப்பும் பட்டாசு வகைகளும், வானில் சென்று வெடிக்கும்போது பல வண்ணங்களை உமிழ்ந்தபடி வெடித்துச் சிதறும் ‘மணி மருந்து’ வைக்கப்பட்ட பட்டாசு வகைகளே இந்த ஆண்டில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சிவகாசி நகரில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் விருதுநகர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம். சாத்தூர், சாலைகளிலும் 600க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பட்டாசு வாங்குவதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் சிவகாசி வந்து குவிந்துள்ளனர். மற்ற மாவட்டங்களை விட சிவகாசியில் வந்து பட்டாசு வாங்கினால் 20 முதல் 35 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைப்பதால் சிவகாசி பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.

இதுகுறித்து பட்டாசு ஆலை உற்பத்தியாளர் பால்ராஜ் கூறும்போது, தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்படைந்துள்ளது. வெளி மாநில விற்பனை 95 சதவிகிதம் நெருக்கி முடித்துவிட்ட நிலையில் உள் மாவட்டத்திற்கான பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வெளி மாவட்ட வியாபாரிகள் வரத் தொடங்கியுள்ளதால் சிவகாசியில் பட்டாசு ஆலைகளிலும், பட்டாசு கடைகளிலும் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பேன்ஸி ரக வெடிகளுக்கும், குழந்தைகளுக்கான பட்டாசுகளுக்கும் அதிக வரவேற்பு உள்ளது என்றார்.


News & Events
top