SIVAKASI WEATHER
சிவகாசி அருகே பட்டாசு தயாரிப்பை நேரில் பார்வையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி

02-09-2018
சிவகாசி அருகே பட்டாசு தயாரிப்பை நேரில் பார்வையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி

சிவகாசி அருகே உள்ள என்ஜினீயரிங் கல்லுரியின் பட்டமளிப்பு விழா நேற்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம்.சாந்தனகவுடர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். பின்னர் அங்கிருந்து மதுரை செல்லும் வழியில் வெம்பக்கோட்டையில் உள்ள ஒரு பட்டாசு ஆலைக்கு சென்று பட்டாசு உற்பத்தி செய்யும் பணியினை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி சாந்தனகவுடர் மற்றும் அவருடன் வந்த நீதிபதிகள் 10 பேர் பட்டாசு ஆலைக்கு சென்றனர். அங்கு பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்துக்கு நேரில் சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி டோகன் எம்.சாந்தனகவுடர் உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்த பட்டாசு தொழிலாளர்களிடம் பட்டாசு உற்பத்தி குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஒவ்வொரு அறைக்கும் சென்று அங்கு தயாரிக்கப்பபடும் வித, விதமான பட்டாசுகள் குறித்து கேட்டறிந்தார். ஒரு கட்டத்தில் சக்கரம் செய்வதை பார்க்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்டார். சிறிய வகை அணுகுண்டுகள் செய்யப்பட்டு வைத்திருப்பதை கண்டு அதை எப்படி செய்வது என்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். தொழிலாளர்களிடம் சம்பளம், சலுகைகள், காப்பீடு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். அப்போது ஆலை நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் குறித்து கூறப்பட்டது. பின்னர் தொடர்ந்து ½ மணி நேரம் ஆலையின் பல்வேறு பகுதிக்கு சென்று பட்டாசு உற்பத்தியை பார்வையிட்டார்.

அவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு உடன் வந்தவர்கள் தொழிலாளர்களிடம் செய்முறை குறித்து தமிழில் கேட்டு பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கி கூறினர். உச்சநீதிமன்ற நீதிபதி வருகையை யொட்டி ஆலையில் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம். சாந்தனகவுடர் பட்டாசு ஆலைக்கு வந்த போது சிவகாசி சார்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரி, மாஜிஸ்திரேட்கள் கல்யாணசுந்தரம், சந்தனகுமார் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்கள் உடன் வந்து இருந்தனர். ஆலைக்கு வந்த உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.


News & Events
top