SIVAKASI WEATHER
பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் போராட்டம்

04-01-2018
சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு ஆதரவு தொிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். பட்டாசால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கால் வெளிமாநில வியாபாரிகள் இந்த ஆண்டுக்கான ஆப் சீசன் ஆர்டர்களை வழங்கவில்லை. இதனால், சிவகாசியில் பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாகவும், தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, கடந்த 26ம் தேதி முதல் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், லாரி ஷெட் உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு சார்ந்த உப தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் சிவகாசியில் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. சிவகாசி பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு தொழிலாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக சிவகாசி காமராஜர் சிலையில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பேரணியாக ஆர்டிஓ அலுவலகம் சென்று மனு அளித்தனர்.



News & Events
top