சிவகாசி அரசு மருத்துவமனை

29-09-2018
சிவகாசி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தல்

சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி பிரகலாதனிடம், சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் வேல்பாண்டி ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:-

சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனை மூலம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் இங்கு மகப்பேறு பிரிவு டாக்டர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே பணிக்கு வருவதால் கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற சிரமப் படுகின்றனர். விருதுநகரிலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் சிவகாசியை சுற்றியுள்ள எம்.புதுப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், சித்துராஜபுரம், வடமலபுரம், நாரணாபுரம், செவல்பட்டி, தாயில்பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, மாரனேரி ஆகிய பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு டாக்டர்கள் இல்லாததால், அந்தப்பகுதியை சேர்ந்தவர்களும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டி இருக்கிறது.

எனவே தினமும் சிகிச்சை அளிக்கும் வகையில், மகப்பேறு டாக்டர்களை நியமிக்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதோடு அனைத்து பிரிவிலும் போதிய அளவுக்கு டாக்டர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது, மத்திய மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வைரப்பிரகாசம், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் பரமசிவம், விவசாய அணி செயலாளர் சந்திரகுமார், நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, உதயபிரகாஷ், செல்வகுமார், சுடலைமணி ஆகியோர் உடனிருந்தனர்.


News & Events