SIVAKASI WEATHER
சிங்கப்பூர் வீரரின் உலக சாதனையை முறியடித்த சிவகாசி காளிராஜ்!

12-12-2018
120 முறை தண்டால்! சிங்கப்பூர் வீரரின் உலக சாதனையை முறியடித்த சிவகாசி காளிராஜ்!

உலக அரங்கில், தமிழக வீரர்கள் பல விளையாட்டுகளில் சாதனைகளை முறியடித்துவருகின்றனர். இதன் வரிசையில், இன்னுமொரு உலக சாதனை படைத்துள்ளார், சிவகாசி நடுவப்பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்ற இளைஞர். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் முன்னாள் மாணவர், காளிராஜ், வணிகவியலில் பட்டம் பெற்று, தற்போது சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிவருகிறார்.

தினமும் உடற்பயிற்சி செய்யும் காளிராஜ், எப்படியாவது உலக சாதனை புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து வைர ரக தண்டால் ( Diamond Pushups) எனப்படும் தண்டாலை 120 முறை எடுத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன் சிங்கப்பூர் வீரர் ரெயின் கியூ கின்லே என்பவர் 82 தண்டால் எடுத்து புரிந்த சாதனையை காளிராஜ் தற்போது முறியடித்துள்ளார். நவம்பர் 30 அன்று சென்னையில் உலக சாதனை அமைப்பின் CEO முன்னிலையில் இச்சாதனை நடைபெற்றது. தொடர்ச்சியாக 120 தண்டாலை எடுத்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இது, Kalam Book of World Records புத்தகத்தில் இடம்பெறுகிறது.

காளிராஜ், சிவகாசி நடுவப்பட்டி எனும் சிறிய கிராமத்தில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நண்பர்களின் ஊக்கத்தால், தினமும் உடற்பயிற்சி செய்யும்போதே நேர அளவை குறித்துக்கொண்டு பயிற்சிசெய்து இச்சாதனைக்காகத் தயாராகியுள்ளார். கல்லூரி நாள்களில் படிப்பில் ஆர்வமில்லாததால், விளையாட்டாகத் தொடங்கிய ஒரு முயற்சி என்கிறார் காளிராஜ்.

காளிராஜின் அண்ணன் ராமராஜ் இவ்வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாகத் தெரிவிக்கிறார். இளம் வயதில் உலக சாதனை புரிந்து மேலும் பல சாதனைகளை முறியடிக்கப்போவதாகக் கூறியுள்ளார் காளிராஜ்.


News & Events
top