SIVAKASI WEATHER
Sivakasi Panguni Pongal 2021

23-03-2021
சிவகாசி பங்குனிப் பொங்கல் 2021

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புகழ்பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழாவும், ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவும், தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா வழக்கமாக நடைபெறும் நாட்களில், வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் திருவிழா நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் நிலை உருவானது. பங்குனிப் பொங்கல் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கொடியேற்றம் நிகழ்ச்சியிலிருந்து தினமும் அதிகாலையில் பெண்கள் மட்டும் பங்குபெறும் கும்பிடாணம் நிகழ்ச்சி 1 வாரம் நடைபெறும், இதற்கு சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் வருவார்கள். ஏற்கனவே அறிவித்தபடி என்றால் ஏப்ரல் 4ம் தேதி பொங்கல் திருவிழாவும், 5ம் தேதி கயறுகுத்து திருவிழாவும் நடைபெறும்.

ஆனால் திருவிழா, தேர்தல் நேரத்தில் வருவதால் பக்தர்கள் வந்து செல்வதில் இடையூறுகள் ஏற்படும். மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு போலீசார் செல்வதால், கோவில் திருவிழா பாதுகாப்பிற்கு போலீசார் ஈடுபடுத்தப்படுவதில் சிரமங்கள் ஏற்படும். இதனால் இந்து நாடார் உறவின்முறை தேவஸ்தான கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, பொங்கல் திருவிழாவை தேர்தல் முடிந்தவுடன் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. வழக்கத்தை விட 2 வாரங்கள் தள்ளி திருவிழாவை நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா ஏப்ரல் 11ம் தேதி கொடியேற்றம், 18ம் தேதி பொங்கல் விழா, 19ம் தேதி கயறுகுத்து, தொடர்ந்து தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே மாதம் 4ம் தேதி கொடியேற்றம், மே 11ம் தேதி பொங்கல் விழா, மே 12ம் தேதி கயறுகுத்து, தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தேவஸ்தானம் நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குனிப் பொங்கல், சித்திரை திருவிழாக்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழாக்களை சிறப்பாக கொண்டாடலாம் என்று நினைத்திருந்த போது, தேர்தல் காரணமாக திருவிழாக்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு சிறிது ஏமாற்றம் தருவதாக உள்ளது.


News & Events
top