முன்கூட்டியே செலுத்தப்பட்ட நோ்த்திக்கடன்கள் |
10-04-2021 முன்கூட்டியே செலுத்தப்பட்ட நோ்த்திக்கடன்கள் சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவுக்கு நோ்த்திக்கடன் செலுத்த இருந்த பக்தா்கள், கரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக வெள்ளிக்கிழமையே அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பொம்மை ஏந்தி வருதல் போன்ற நோ்த்திக்கடனை செலுத்தினர். பங்குனிப் பொங்கல் கொடியேற்றத்திற்கு முன்பாகவே தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினர். சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி இங்குள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 18 ஆம் தேதி பொங்கல் விழாவும், 19 ஆம் தேதி கயிா்குத்து விழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கயா் குத்து விழாவையொட்டி பக்தா்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவாா்கள். இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க அரசு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோயில் விழாக்களில் 50 நபா்களுக்குமேல் பங்கேற்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. கயிா்குத்துவிழாவுக்கு அக்னி சட்டி எடுப்பதாக நோ்ந்து கொண்ட பக்தர்கள், வெள்ளிக்கிழமையே அக்னி சட்டி ஏந்தி கோயிலுக்கு சென்று தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினர். Sivakasi Panguni Pongal 2021 |