SIVAKASI WEATHER
சிவகாசி மேயர் பதவி

29-01-2022
சிவகாசி மேயர் பதவி; வெளியானது பரபரப்பு தகவல்கள்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி தொடங்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடக்கிறது. இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

அந்தவகையில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது. இதனால் வழக்கம்போல் கட்சியினர் மத்தியில் உற்சாகம் களைகட்டியுள்ளது.

கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் மிக குறைந்த எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவியது.

எனவே இந்த முறை தமிழகத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3 மேயர் பதவிகளாவது கேட்டு பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பட்டாசு தொழிலில் கோலோச்சி வரும் சிவகாசி மாநகராட்சியை கைப்பற்றுவதில் அனைத்து அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகாசி காங்கிரசை பொறுத்தவரை செல்வாக்கு மிக்கவர் என்று பார்த்தால் பிரியங்கா கணேஷ்குமார். என்பவர் உள்ளார். தற்போது சிவகாசி மேயர் பதவி காங்கிரசுக்கு என்ற தகவலால் பிரியங்கா கணேஷ்குமார் தனக்காக காய் நகர்த்தும் பணியில் மும்முரமாகி இருக்கிறார்.

அதற்கடுத்ததாக காங்கிரசை சேர்ந்த கார்த்தீஸ்வரி சிவகாசி மேயர் பதவியை அடைந்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். இன்னமும் சிவகாசி மேயர் பதவி காங்கிரசுக்கு என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாததால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அதே சமயம் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் பிரின்டிங் தொழில் என பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் புழங்க கூடிய சிவகாசியை விட்டு கொடுக்க திமுகவும் தயாராக இல்லை என்பதால் முன்னாள் சேர்மன் ஞானசேகரன் மனைவியை முன்னிலைப்படுத்தி காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. இதனால் தீபாவளி பட்டாசுகளை விட கூடுதலாகவே சிவகாசி அரசியல் பட்டாசு தீப்பொறியை கக்குகிறது.

-Samayam The Times of India


News & Events
top