SIVAKASI WEATHER
ஆன்-லைனில் பட்டாசு விற்பனை மும்முரம்

04-10-2017
- The Hindu

ஆன்-லைனில் பட்டாசு விற்பனை மும்முரம்: சிவகாசியில் ரூ.300 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்ப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகாசியில் இந்த ஆண்டு ஆன்-லைன் பட்டாசு விற்பனை தீவிரமாக நடைபெறுகிறது. ரூ.300 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பட்டாசுகள் நேரடி விற்பனை மட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகளாக ஆன்-லைன் விற்பனையும் நடைபெறுகிறது.

சிவகாசியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஆன்-லைன் பட்டாசு விற்பனை நிறுவனங்கள் உள்ளன. இந்த ஆண்டு பிரபல பட்டாசு நிறுவனங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்களும் ஆன்-லைன் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே ஆன்-லைன் மூலம் தேவையான பட்டாசு வகைகளைத் தேர்வு செய்து ஆர்டர் கொடுக்கின்றனர். ஆன்-லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதும் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு பட்டாசு பெட்டிகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆன்-லைனில் பட்டாசு விற்பனை செய்யும் சிவகாசியைச் சேர்ந்தவர் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு ஆன்-லைன் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது. பிரபல நிறுவனங்களுக்கு ஈடாக ஏராளமான சிறு நிறுவனங்களும் ஆன்-லைன் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

வெளி மாநிலங்களில் வசிப்போர் மட்டுமின்றி தமிழகத்தில் பெரு நகரங்களில் வசிப்போர், அரசு, தனியார் நிறுவனத்தினர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோரிடம் இருந்து ஆன்-லைனில் அதிகமாக ஆர்டர்கள் குவிகின்றன. சிவகாசிக்கு வந்து பட்டாசு வாங்க முடியாதவர்கள் ஆன்-லைன் மூலம் சிவகாசி விலைக்கே பட்டாசுகளை வாங்க முடிகிறது.

சில நிறுவனங்கள் இலவச டோர் டெலிவரியும் செய்கின்றன. மேலும் சில ஆன்-லைன் பட்டாசு விற்பனை நிறுவனங்கள் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கின்றன.

கடந்த ஆண்டு ஆன்லைன் பட்டாசு விற்பனை ரூ.100 கோடியை எட்டியது. இந்த ஆண்டு ஆர்டர்கள் அதிகமாக உள்ளதால் ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்பனை சுமார் ரூ.300 கோடியை எட்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.


News & Events
top