SIVAKASI WEATHER

Super Sivakasian

அரசு பள்ளியை ஹைடெக் பள்ளியாக மாற்றிய சிவகாசி ஆசிரியர் கருணைதாஸ்

சிவகாசி நாரணாபுரம் அரசு பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸ். பாடங்களை, மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட் மூலம் டிஜிட்டல் பாடமாக மாற்றி கற்பிக்கிறார். மைக்ரோசாப்ட் ஸ்கைப் மூலம் வெவ்வேறு நாடு அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு, கற்றல் அனுபவங்களைப் பெற வைக்கிறார். மாணவர்கள் தனித் திறனை கண்டறிந்து , மற்ற பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், மைக்ரோசாப்ட் ஸ்கைப்மூலம் பகிர்கிறார்.

இதன் விளைவாக, இப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் ஜெயகுமார் 'இந்தியாவின் இளம் விஞ்ஞானி' பட்டம் பெற்று, மாஸ்கோ விண்வெளி மையம் சென்று பயிற்சியும் பெற்றார். மாணவன் கூடலிங்கம் , தென்னிந்தியா அளவில் பன்முகத்திறன் கொண்ட மாணவன் என, பி.பி.சி., மற்றும் ஹார்லிக்ஸ் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டார். இன்ஸ்பயர் விருதுக்கு ஏழாம் வகுப்பு மாணவன் கோபிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவன அப்ளிக்கேஷன் உதவியுடன்பாடங்களை கற்பித்து வரும் ஆசிரியர் கருணைதாஸ், சிங்கப்பூரில் உலக ஆசிரியர்கள் கருத்தரங்கிலும் பங்கேற்றார்.

3000 ஓவியர்களை உருவாக்கிய சிவகாசி ஓவியர் சில்வெஸ்டர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கணினி வருவதற்கு முன்னர் சுமார் 200 ஓவியர்கள், காலண்டர் உள்ளிட்டவற்றுக்கு ஓவியம் வரைந்து கொடுத்து வந்தனர். தற்போது சிவகாசியில் வணிகரீதியாக செயல்பட்ட ஓவியர்களும் கணினிக்கு மாறிவிட்டார்கள். ஆனால் கையினால் வரையும் ஓவியத்தை இன்னும் விடாமல், பலருக்கு ஓவியப்பயிற்சியும் அளித்து வருகிறார் சிவகாசி ஓவியர் பி.சில்வெஸ்டர்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது:
""நான் பிறந்த ஊர் திருநெல்வேவி மாவட்டம் காவல்கிணறு ஆகும். சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம். எனது ஓவிய ஆர்வத்தை பார்த்த உறவினர் ஒருவர் என்னுடைய 17 வயதில் மும்பைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மும்பையிலிருந்து "போல்டு இந்தியா' என்ற தமிழ் பத்திரிகை வந்து கொண்டிருந்தது.அந்த பத்திரிகையில் லே அவுட் போடவும், கதைகளுக்கு ஓவியம் வரைவதுமாக வேலை செய்து வந்தேன். இதன்மூலம் பல ஓவியர்களின் தொடர்பு கிடைத்தது. ஓவியம் தொடர்பான புத்தகங்களைப் படிக்க தொடங்கினேன். இப்படியாக நான் என்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டேன்.

1986 ஆம் ஆண்டு சிவகாசி வந்தேன். அப்போது மகேஷ் என்ற ஓவியரிடம் வேலைக்கு சேர்ந்தேன். இதன்மூலம் வணிகரீதியான ஓவியங்களான காலண்டர்களுக்கு ஓவியம் வரைவது உள்ளிட்ட ஓவியங்களை வரையத் தொடங்கினேன். பின்னர் பல பட்டாசு ஆலைகளுக்கு தேவையான லேபிள் அச்சடிக்க ஓவியங்களை தனியே வரையத் தொடங்கினேன். அப்போது கறுப்பு வெள்ளை புகைப்படம் பிரிண்ட் போட்டு, அதில் வாட்டர் கலர் கொடுக்கும் வேலையை நானே கற்றுக்கொண்டேன். பென்சில் ஓவியம், சார்கோல் ஓவியம், ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் ஓவியம், வாட்டர் கலர் ஓவியம், குவாஜ்கலர் ஓவியம், ட்ரைபேஸ்டல் ஓவியம், பென் ஒர்க் ஓவியம் ஆகிய ஓவியங்களை வரையத் தெரியும். இவை அனைத்தையும் நானே சுயமாக கற்றுக்கொண்டேன்.

1998 ஆம் ஆண்டு முதல் ஓவியப் பயிற்சி அளித்து வருகிறேன். சுமார் 3000 பேர் ஓவியப் பயிற்சி பெற்றுள்ளனர். என்னிடம் பயிற்சி பெற்ற சிலர், தனியே பலருக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். 6மாதம் முதல் 9ஆண்டுகள் வரை என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் உண்டு. 2009 ஆம் ஆண்டு சிவகாசியில் ஓவியக் கண்காட்சி நடத்தினேன். என்னிடம் பயிற்சி பெற்ற பலரின் ஓவியங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் பென்சில் ஓவியம் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளேன்'' என்றார்.

top