சிவகாசியில் 21-ந்தேதி விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்

17-01-2018
பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சிவகாசியில் 21-ந்தேதி விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையை நம்பித்தான் தொழிலாளர்கள் வாழ்ந்துகொண்டு வருகிறார்கள். பொதுநல வழக்கு என்ற பேரில் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

பட்டாசு வியாபாரிகள் தொழிற்சாலைகளுக்கு முன்பணம் செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழங்கவில்லை. வழங்காத காரணத்தினால் பட்டாசு தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இதை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மத்திய அரசும், தமிழக அரசும் தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக் குறியாக உள்ளது.

உடனே இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வரும் 21-ந்தேதி சிவகாசி நகரம், பாவடி தோப்பு, பத்திரகாளியம்மன் கோவில் அருகில் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையேற்று கண்டன உரையாற்றுகிறார்.

இதில் பிரேமலதா விஜயகாந்தும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், பட்டாசு தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


News & Events