SIVAKASI WEATHER
விவசாயத்தில் பட்டையை கிளப்பும் சிவகாசி ஆடிட்டர்

28-02-2018
விவசாயத்தில் பட்டையை கிளப்பும் சிவகாசி ஆடிட்டர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள சுப்பிரமணியபுரம் எனும் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார் அருளானந்தம். ஒரு மாலை வேளையில் தோட்டத்தில் இருந்த அருளானந்தத்தைச் சந்தித்துப் பேசினோம்.

“அப்பா, பிரின்டிங் பிரஸ், தீப்பெட்டி கம்பெனி நடத்திட்டுருக்காரு. நான் ஆடிட்டரா இருக்கேன். எங்களுக்கும் விவசாயத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஆனா, மரம் வளர்ப்பு, இயற்கை வாழ்வியல்மேல ஆர்வம் உண்டு. என்னோட அம்மா சர்க்கரை வியாதியால பாதிக்கப்பட்டு 2006-ம் வருஷம் இறந்துட்டாங்க. அப்போ, சர்க்கரை வியாதி சம்பந்தமா இன்டர்நெட்ல தேடிப் பார்த்தப்போ, ‘உணவு முறை மாற்றம்தான் சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல நோய்களுக்கும் காரணம்’னு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் இயற்கையா விளைஞ்ச பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள் பத்தியெல்லாம் நான் தெரிஞ்சுகிட்டேன். அடுத்து வீட்டுத்தோட்டம் போட்டு நாமளே நமக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்னு அது தொடர்பா இன்டர்நெட்ல தேடினப்போதான், எனக்குப் பசுமை விகடன் புத்தகம் பத்தித் தெரிய வந்துச்சு. உடனே கடைக்குப் போய் பசுமை விகடனை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். அதுல விவசாயம் சம்பந்தமா நிறைய விஷயம் இருக்கவும், சந்தா கட்டித் தொடர்ந்து படிச்சுட்டுருக்கேன்.

பசுமை விகடன் படிச்சது மூலமா இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசை வந்துச்சு. தொடர்ந்து பசுமை விகடன்ல வர்ற விவசாயிகள்கிட்ட பேச ஆரம்பிச்சேன். சில தோட்டங்களுக்கு நேரடியாகப் போய் பார்த்துட்டு வந்தேன். அப்படிப் பார்த்தவங்க எல்லோருமே நம்பிக்கை கொடுத்ததால... அப்பாகிட்ட என்னோட விவசாய ஆசையைச் சொன்னேன். அப்பா ரொம்பச் சந்தோஷப்பட்டு, 2011-ம் வருஷம் இந்தப் பத்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தாங்க. இது பட்டாசு கம்பெனி ஆரம்பிக்கிறதுக்காக வாங்கிப் போட்ட நிலம். அந்த கம்பெனி தொடங்குவது தள்ளிப்போய்கிட்டே இருந்ததால, நிலம் முழுக்கக் கருவேல மரங்கள் மண்டிப்போய்க் கிடந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி, பலமுறை உழுது மண்ணைப் பொலபொலப்பாக்கி, 2012-ம் வருஷத்துல இருந்து இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருக்கேன்” என்று தான் விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன அருளானந்தம், தன்னுடைய விவசாய அனுபவங்கள் குறித்துச் சொன்னார்.

“நிலத்துல பலமுறை ஆட்டுக்கிடை போட்டு, பலதானியங்களை விதைச்சு மடக்கி உழுது மண்ணை வளப்படுத்தினேன். அடுத்து 10 ஏக்கர் முழுசும் தினை, குதிரைவாலி, இருங்குச்சோளம், வெள்ளைச்சோளம்னு போட்டு வரப்புல எள் போட்டேன். கட்டாந்தரையாகக் கிடந்த அந்த நிலத்துல பயிர் விளைஞ்சு வர்றதைப் பார்க்குறப்போ ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. அந்தச் சமயம் கணிசமான மகசூலும் கிடைச்சது.

தொடர்ந்து வருஷாவருஷம் சிறுதானியங்களைத் தான் மானாவாரியா சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். போன முறை (2016-ம் வருஷம்) பாசிப்பயறு, உளுந்து, தட்டைப்பயறு, துவரை, குதிரைவாலி, எள்ளுனு விதைச்சேன். ஆரம்பத்துல கிடைச்ச மழையில பயிர் நல்லா வளர்ந்துச்சு. அடுத்துச் சுத்தமா மழையே கிடைக்காததால பயிரெல்லாம் கருகிப்போச்சு. அதனால, போன வருஷம் பத்து ஏக்கர் நிலத்துலயும் குதிரைவாலியை மட்டும் விதைச்சுவிட்டேன். ஓரளவு மழை கிடைச்சதால, நல்லா விளைஞ்சு வந்தது” என்ற அருளானந்தம், மகசூல் மற்றும் விற்பனை குறித்துச் சொன்னார்.

“பத்து ஏக்கர் நிலத்துலயும் சேர்த்து 3,540 கிலோ குதிரைவாலி கிடைச்சுருக்கு. மொத்தத்தையும் அரிசியா அரைச்சு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். என்னோட விளைபொருள்களைச் ‘சிவகாசி தேன்கனி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ நடத்துற வாரச்சந்தையிலதான் விற்பனை செய்துட்டுருக்கேன். அங்க எனக்குக் கட்டுபடியான விலை கிடைச்சுட்டுருக்கு. மொத்தம் 3,540 கிலோ குதிரைவாலியை அரைச்சா 2,000 கிலோ அளவுக்கு அரிசி கிடைக்கும்.

இப்போதைக்கு ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகிட்டுருக்கு. எனக்கும் அதே விலை கிடைச்சா 1,60,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். எப்படிப் பார்த்தாலும், 1,50,000 ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைச்சுடும். அதுல பாதியளவுக்குச் செலவு போனாலும், மீதி 75,000 ரூபாய்க்குமேல லாபமா நிக்கும்னு எதிர்பார்க்குறேன்” என்ற அருளானந்தம் நிறைவாக,

“எனக்கு வேலை அதிகமா இருக்குறதால வாரத்துக்கு ஒரு தடவைதான் நிலத்துக்கு வருவேன். மானாவாரிப் பயிருங்கிறதால விதைக்கிறதும் அறுக்குறதும் மட்டும்தான் வேலை. களையெடுக்குறது மண் அணைக்கிறதுனு எந்தப் பராமரிப்பு வேலையையும் நான் செய்யலை. இயற்கையா விளைஞ்சு வர்றது போதும்னு விட்டுட்டேன். நல்லா பராமரிச்சுருந்தா இன்னமும் அதிக மகசூல் கிடைச்சுருக்கும். நான் வருமானத்துக்காக விவசாயத்துக்கு வரலை. இயற்கை விவசாயம் மூலமா கிடைக்கிற ஆத்ம திருப்திக்காகத்தான் விவசாயம் செய்றேன். நான் எதிர்பார்க்குற மனத்திருப்தி இதுல கிடைக்குது. இங்க வந்து வரப்புல நடந்து சுத்தமான காற்றைச் சுவாசிக்கிறப்போ கிடைக்கிற மன நிம்மதிக்கு ஈடு இணையே இல்லை. என் குழந்தைகளுக்கும் இயற்கையைப் பத்திச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன்” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
அருளானந்தம்,
செல்போன்: 98431 15081

நன்றி : பசுமை விகடன் இ.கார்த்திகேயன்,
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்


News & Events
top