சிவகாசியில் புதிய கல்வி மாவட்ட அலுவலகம் திறப்பு

25-06-2018
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், சிவகாசியில் புதிய கல்வி மாவட்ட அலுவலகத்தையும் மற்றும் திருத்தங்கலில் எம்.ஜி.ஆர். காலனி, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் அன்பின்நகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் டி.எம்.இந்திரா நகர் ஆகிய 3 இடங்களில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளையும், பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டஆட்சியர் அ. சிவஞானம் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் தொடந்து முதலிடம் வகித்து வருகிறது. இதற்கு உழைத்த ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அரசு சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். விருதுநகர் மாவட்தத்தில் ஏற்கெனவே 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. தற்போது, நான்காவது கல்வி மாவட்டம் சிவகாசியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். இதில், சிவகாசி ஒன்றியத்தில் உள்ள 200 பள்ளிகள், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள137 பள்ளிகள், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள 95 பள்ளிகள் என மொத்தம் 432 பள்ளிகள் உள்ளன. இதில், 3,537 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்றார். நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மனோகரன், சிவகாசி துணை இயக்குநர் ராம்கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


News & Events