ஜிஎஸ்டியால் ஆர்டர் 40 சதவீதம் குறைவு காலண்டர் விலை 20 சதவீதம் உயர்வு

12-12-2018
ஜிஎஸ்டியால் ஆர்டர் 40 சதவீதம் குறைவு காலண்டர் விலை 20 சதவீதம் உயர்வு: சிவகாசியில் தயாரிப்பு பணி தீவிரம்

சிவகாசியில் ஜிஎஸ்டியால் மாத காலண்டரின் விலை 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. ஆர்டரும் 40 சதவீதம் குறைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சகத்தொழில் நடந்து வருகிறது. இந்த தொழிலில் தினசரி மற்றும் மாத காலண்டர் தயாரிக்கும் பணி பிரதானமாக உள்ளது. இதன் மூலம் சிவகாசியில் ஆண்டுக்கு ₹150 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போது 2019ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிக்கும் பணி, 50க்கும் மேற்பட்ட அச்சகங்களில் நடந்து வருகிறது. நியூஸ் பிரிண்ட் பேப்பர் தட்டுப்பாட்டால் தினசரி காலண்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்குறிப்பு சிலிப் கேக் தட்டுப்பாட்டால், தினசரி காலண்டர் விலை அதிகரித்துள்ளது. மாத காலண்டர்கள் மேப்லித்தோ, ஆர்ட் பேப்பர்களில் தயாரிக்கப்படுகின்றன. இவை விசேஷ தினங்கள், நல்லநேரம், வாஸ்து நாட்கள் போன்ற தகவல்களுடன் இரண்டு கலர் மற்றும் மல்டி கலரில் தயாரிக்கப்படுகின்றன. பெரிய நகைக்கடை, ஜவுளி கடைகளில் ஆர்டர் பெற்று மாத காலண்டர் தயாரிப்பு சிவகாசியில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த காலண்டர் ஒன்று ₹16 முதல் ₹85 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மாத காலண்டர்களுக்கு 8 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், 20 சதவீதம் வரை விலை அதிகாரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் 40 சதவீதம் வரை ஆர்டர் குறைந்துள்ளது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை உற்பத்தி செய்யப்படும் மாதக்காலண்டர்கள், தைப்பொங்கல் வரை பெரிய, பெரிய கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆனால் நடப்பாண்டில் விலை அதிகரிப்பால் போதிய ஆர்டர் வரவில்லை. இதனால் டிசம்பர் மாத இறுதிக்குள் மாத காலண்டர் தயாரிப்பு பணி முடிந்து விடும் என அச்சக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அச்சக உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘தினசரி காலண்டர் உற்பத்திக்கு இணையாக மாத காலண்டர்கள் உற்பத்தி பணி நடக்கும். இந்த ஆண்டு பெரிய, பெரிய நிறுவனங்கள் மாத காலண்டர் ஆர்டர்களை வெகுவாக குறைத்து விட்டன. கடந்த ஆண்டை போல உற்பத்தி நடைபெறவில்லை. இது தவிர மாத காலண்டர் தயாரிப்பு பணிக்கான கூலிஉயர்வு, மின்கட்டண உயர்வு, வரி விதிப்பு, பேப்பர் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் உற்பத்தி குறைந்துள்ளது’ என்றார்.


News & Events