SIVAKASI WEATHER
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மும்முரம்

23-09-2019
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மும்முரம்

இந்தியாவின் பட்டாசு நகரம் என அழைக்கப்படும் சிவகாசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பெரிய, சிறிய அளவில் 1200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

பட்டாசு வெடிப்பதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக பட்டாசு உற்பத்திக்கும், அதனை வெடிப்பதற்கும் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசு மட்டும் தயாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதுபோன்ற கெடுபிடி காரணமாக சிவகாசியில் பட்டாசு தொழில் கடும் பாதிப்புக்குள்ளானது. நீதிமன்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி பட்டாசு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வருகிற அக்டோபர் மாதம் 27-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக பண்டிகைக்கு 3 மாத காலத்துக்கு முன்பே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடைபெறும். வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவியும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

பண்டிகைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போதுதான் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் தற்போது வரத் தொடங்கியுள்ளது. இதனால் மந்தமாக இருந்த பட்டாசு உற்பத்தி மும்முரமடைந்துள்ளது. வருடத்தில் 10-க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளை விட தற்போது ஒப்பிடும்போது ஆர்டர் குறைவுதான். எனினும் பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆர்டர்கள் அதிக அளவு வரும் என்ற நம்பிக்கையில் பட்டாசு உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் இறுதி தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்ற அச்சமும் உள்ளது. பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


News & Events
top