சிவகாசியில் சமத்துவத்தை பேணும் தெருக்கட்டு பொங்கல்

28-02-2020
சிவகாசியில் சமத்துவத்தை பேணும் தெருக்கட்டு பொங்கல்!

மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு, கோயில்களில் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். சிவகாசியில் உள்ள தெருகட்டு அமைப்பினர், ஆண்டுதோறும் மாசி பொங்கல் விழாவையொட்டி, பொதுமக்களிடம் வரி வசூலிப்பர். இதில், அனைத்து மதத்தினரும், சாதியினரும் வரி செலுத்துவர். விழாவுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர், நான்கு முனை சந்திப்பில் தெருவின் நடுவே ஒரு அகல் விளக்கு ஏற்றப்படும். பின்னர் ஒலி பெருக்கி உள்ளிட்டவை அமைக்கப்படும். இதையடுத்து தினசரி இரவு பெண்கள் கூடி, அந்த அகல் விளக்கினைச்சுற்றி பக்தி பாடல்கள் பாடி கும்மி அடிப்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலும் பொங்கல் விழா நடைபெறும். அதற்கு முதல் நாள் அதாவது வியாழக்கிழமை அகல் விளக்கு இருந்த இடத்தில் சுவாமி பீடம் அமைக்கப்படும். அதற்கு முத்தாலம்மன் என பெயரிடுவார்கள். அம்மன் பூடம் அமைக்கப்படும்.

அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு அந்த அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெறும். இதைத்தொடர்ந்து, தெருவில் உள்ள பெண்கள், ஆண்கள் அனைவரும், தேங்காய் பழத்துடனும், முளைப்பாரியுடனும் ஊர்வலமாக மாரியம்மன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், கருப்பசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று, தேங்காய் உடைத்து வழிபடுவர். பின்னர், அம்மன் முன், பொதுப்பானையில் பொங்கலிட்டு, சனிக்கிழமை காலை, அதனை வரி கொடுத்தவர்களுக்கு பிரசாதமாக அளிப்பர்.

ஞாயிற்றுக்கிழமை தெருக்கட்டுப் பகுதியில் உள்ள இளைஞர்கள், சிறுவர்களுக்கு பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, இரவு பரிசளிப்பு விழா நடைபெறும். பின்னர், தெருவில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் பீடத்தை அகற்றி, நீர் நிலையில் கரைத்துவிடுவார்கள்.
சிவகாசியில் இந்த மாசி தெருக்கட்டுப் பொங்கல் விழா ஆண்டுதோறும் சாதி, மத பாகுபாடின்றி சமூகத்தின் ஒற்றுமைக்காக முன்னோர்கள் செய்த ஏற்பாடாகும்.


News & Events