SIVAKASI WEATHER
மாநகராட்சி ஆகும் சிவகாசி முதல்வர் பழனிசாமி அசத்தல் அறிவிப்பு

03-03-2020
மாநகராட்சி ஆகும் சிவகாசி முதல்வர் பழனிசாமி அசத்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது சரித்திர சாதனை, விரைவில் சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க 11 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒவ்வொரு மாவட்டங்களாக நடந்து வருகிறது. இன்று விருதுநகரில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமையேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தமிழில் வணக்கம் என கூறி பேச்சைத் தொடங்கினார். அவரை தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார்.

முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது சரித்திர சாதனை. அதிமுக அரசு இந்த சாதனையை செய்துள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான மருத்துவ கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெரும் தொகை ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம்.

தமிழகத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் 'காச நோய்' இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும். போலியோ இல்லாத மாநிலமாக நாம் மாநிலம் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவில் எப்போதும் தமிழகம்தான் முதலிடம்.

சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மூலம் மக்கள் குறைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது. சிவகாசியை மாநகராட்சியாக்கும் பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குண்டாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. சிவகாசியில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

காசி விஸ்வநாதர் கோவில் புனரமைப்பிற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மதுரை எய்ம்ஸ் பணிகள் விரைவில் முடிக்கப்படும். தமிழகம் முழுக்க மீதமுள்ள இடங்களில் 10 மருத்துவ கல்லூரிகள் விரைவாக அமைக்கப்படும். இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் தமிழக மருத்துவ துறையில் புதிய உயரத்தை தொடும். அதிமுக அரசு வேளாண் மக்களை காக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


News & Events
top