விருதுநகர் மாவட்டத்தில் அரசு டாக்டர், தீயணைப்பு வீரர் உள்பட 16 பேருக்கு கொரோனா

25-05-2020
விருதுநகர் மாவட்டத்தில் அரசு டாக்டர், தீயணைப்பு வீரர் உள்பட 16 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, கொரோனா பாதிப்பு உறுதியானால் மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் விருதுநகர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று 814 பேர் முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.


இந்தநிலையில் விருதுநகர் தனியார் பாலிக்டெக்னிக் முகாமில் தங்கி இருந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது தவிர மல்லாங்கிணறு, ராஜபாளையம், திருச்சுழி அருகே உள்ள அகத்தாகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அடைந்த 16 பேரில் 2 வயது பெண் குழந்தையும், 4 பெண்களும் அடங்குவர். இவர்களில் 14 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

அரசு டாக்டர்

மற்ற 2 பேரில், விருதுநகர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 35 வயது டாக்டர் ஒருவர். இவர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் மருத்துவ பரிசோதனை செய்யும் பணியில் இருந்தார். அதன்மூலம் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதேபோல சென்னையில் தீயணைப்பு படையில் பணியாற்றும் 43 வயது வீரர் தனது சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு வந்திருந்தார். அவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது.

132-ஆக உயர்வு

இதன் மூலம் இம்மாவட்டத்தில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

நேற்று வரை 8 ஆயிரத்து 723 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 708 பேருக்கான முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News & Events