சிவகாசியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

08-07-2020
சிவகாசியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக சிவகாசி தாலுகா பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகாசி சுகாதார மாவட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.

483 பேர்

இதில் இதுவரை 483 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தித்தங்கலை சேர்ந்த டாக்டர் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர். சிவகாசி தாலுகாவில் மட்டும் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். தற்போது சிவகாசி பகுதியில் வேகமாக கொரோனா தொற்று பரவி வருவதை நிரூபிக்கும்வகையில் நேற்று மட்டும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தாலுகாவில் தான் கொரோனா பாதிப்பு அதிம் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் மட்டுமே கொரோனா பாதிப்பை குறைக்க முடியும் என சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து முன்னாள் நகர்மன்றதலைவர் ஞானசேகரன் கூறியதாவது:-

சிவகாசிநகரில் உள்ள பொதுமக்கள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட சில பகுதியில் உள்ளவர்கள் இந்த நோயின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் சார்பில் மீண்டும் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரிசோதனை மையங்கள்

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்டபகுதியில் பரிசோதனை மையங்கள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும் என்றார். சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று காலை கிருமிநாசினி தெளிக்கும் பணிநடைபெற்றது.

நகராட்சி பொறுப்பு கமிஷனர் பாண்டிதாய், சுகாதார அலுவலர் கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் பல இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் பள்ளபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சங்கையா, பஞ்சாயத்து செயலாளர் லட்சுமணபெருமாள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


News & Events