SIVAKASI WEATHER
ஊரடங்கால் பட்டாசு தொழிலாளர்கள் பரிதவிப்பு

20-07-2020
ஊரடங்கால் பட்டாசு தொழிலாளர்கள் பரிதவிப்பு

தீபாவளியை சிறுவர் முதல் பெரியவர் வரை குதூகளத்துடன் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் பட்டாசு. அந்த பட்டாசுகளை தயாரிக்கும் தொழிலாளர்களோ, தற்போது நிலை குலைந்து போய் இருக்கிறார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கான மிகப்பெரிய வாழ்வாதாரமாக இருந்து வருபவை பட்டாசு ஆலைகள். சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக பணியாற்றி வருகிறார்கள். சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாக பட்டாசு தொழிலை நம்பி இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு பிறகு திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மீண்டும் ஆலைகள் மூடப்பட்டன. இதனால், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்.

50 நாட்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருந்தபோது, பலரிடமும் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியதாகக் கூறும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள், தற்போது மீண்டும் கடன் கேட்கவே கூச்சமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதையும் தாண்டி, கடன் கேட்டாலும் கிடைக்குமா என்பதும் கேள்விக் குறி ஆகியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனாவால் இறந்துவிடுவோமோ என்ற அச்சம் விலகிவிட்டதாகக் கூறும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள், பசி தங்களை சாகடித்துவிடுமோ என்ற அச்சம்தான் தற்போது மேலோங்கி இருப்பதாகக் கூறுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருவதாகக் கூறும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள், வாழ்க்கை மிகப் பெரிய போராட்டமாக மாறிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. இதில் இருந்து சிலரால் சுயமாக எழுந்திருக்க முடிகிறது. பலருக்கு, பிறரது உதவி தேவையாய் இருக்கிறது. அந்த உதவிகளை யார் அளிக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.


News & Events
top