SIVAKASI WEATHER
சிவகாசி தற்காலிக காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு உடல் வெப்ப சோதனை

01-08-2020
சிவகாசி தற்காலிக காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு உடல் வெப்ப சோதனை

விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகளை முழுவீச்சில் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களை கண்காணிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மாவட்டத்தில் இருக்கும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, மக்கள் கூட்டம் அதிகமாக வந்ததால் சந்தைகள் மூடப்பட்டு, அதற்கு பதிலாக நகரின் முக்கியப் பகுதிகளில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டு, கடந்த நான்கு மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தற்காலிக சந்தைகளில் காய்கறி கடைகள் குறைவாகவே இருந்து வந்தது. நாட்கள் செல்ல செல்ல தற்காலிக சந்தைகளில் கடைகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

இதனால் மக்கள் கூட்டம் காய்கறிக்கடைகளில் அதிகமாகி வருகிறது. இதனால் தொற்று பரவலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகாசி நகராட்சிக்குட்பட்ட காரனேஷன் காலனி சந்திப்பு பகுதியில் செயல்படும், தற்காலிக காய்கறி சந்தையில் இன்று நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கடைகளில் இருந்த வியாபாரிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனைகள் செய்தனர்.

இதில் பத்து வியாபாரிகளுக்கு காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் அனைவரையும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைரஸ் தொற்று பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டது. மேலும் பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். சிவகாசியில் நான்கு இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்படுகின்றது, அவைகள் அனைத்திலும் தொடர் பரிசோதனைகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.


News & Events
top