SIVAKASI WEATHER
பட்டாசு படும் பாடு: தடுமாறும் சிவகாசி!

26-10-2021
பட்டாசு படும் பாடு: தடுமாறும் சிவகாசி!

நூறாண்டுகளுக்கு முன்பாக சிவகாசியினைத் தொழில் நகரமாக மாற்றிட அடித்தளம் போட்டுக் கொடுத்தவர்கள் அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார். இவர்களின் சீரிய முயற்சிகளின் பயனாக 1923ல் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே சிவகாசியில் தீப்பெட்டித் தொழிலும் லித்தோ ஆப்செட் அச்சுத் தொழிலும் ஒருசேரக் கால்கள் பதித்தன. நவீன விஞ்ஞான அசுர வளர்ச்சி, பரவலாகத் தொழில் பரவிடுதல் காரணமாக, சமீபத்திய இருபது முப்பது ஆண்டுகளாகவே தீப்பெட்டித் தொழிலும் லித்தோ ஆப்செட் அச்சுத் தொழிலும் சிவகாசியில் அதிபயங்கர வீழ்ச்சியினைச் சந்தித்து விட்டது. அதுபோல சிவகாசியில் பட்டாசுத் தொழிலும் ஆகிவிடுமோ என்கிற பேரச்சம் பட்டாசுத் தொழில் உற்பத்தியாளர்கள் மனதில் குடி புகுந்துள்ளது.

பெரிய தொழிற்சாலைகள் நூற்றியிருபது, நடுத்தர தொழிற்சாலைகள் இருநூறு, சிறு குறு தொழிற்சாலைகள் எல்லாம் சேர்த்து சுமார் ஆயிரத்து அறுநூறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நேரடியாக மூன்று லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக ஐந்து லட்சம் தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். ஆக மொத்தம், எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பட்டாசு உற்பத்தித் தொழிலை மையப்படுத்தியே அமைந்துள்ளது.

கொரோனா நிலவரம் சார்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி வியாபாரம் மட்டுமல்ல, கோயில் திருவிழாக்கள், மனித இறப்புச் சடங்கு, திருமணம் இதர சுப காரியங்களில் கூட பட்டாசு வெடிப்பது என்பது மிகக் குறைந்து போய் விட்டது. அதிலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகள் கூட வெடிக்கக் கூடாது என டெல்லி உட்பட ஐந்து மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. சிவகாசி பசுமைப் பட்டாசுகளுக்கான தடையினை நீக்கக் கோரி அந்தந்த மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனையேற்று ராஜஸ்தான் மாநில முதல்வர், சிவகாசி பசுமைப் பட்டாசுகளுக்கான தடையினை நீக்கி அறிவித்துள்ளார். எப்படியிருப்பினும் சிவகாசி பட்டாசு தொழிலானது, படாதபாடு பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

- KalkiWeekly


News & Events
top