| திருவாதிரை 2021 |
25-12-2021 சிவகாசி திருவாதிரை திருவிழா 2021 சிவகாசியில் திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிவகாசியில் மார்கழி மாதத்தில் நடராஜர் வீதி உலா வரும் ஆருத்ரா தரிசனம் என்னும் திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சிவகாசி சிவன் கோயில், முருகன் கோயிலில் இருந்து நடராஜர், சிவகாமி அம்மாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். கடை கோயிலில் இருந்து பத்திரகாளியம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருளினர். வழக்கமாக மூன்று தேரும் காலை 11 மணிக்கு சிவகாசி தெற்கு ரதவீதியில் நிலை நிறுத்தப்பட்டு ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து செல்வது வழக்கம். சென்ற ஆண்டு கூட அப்படிதான் நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு தேர் வீதி உலா இல்லாமல், அந்தந்த கோயில் முன்பாக தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. மூன்று தேர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நிலை நிறுத்தப்படாததால் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நிகழ்ச்சியில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சிவகாசியில் கரும்பு, பனங்கிழங்கு விற்பனை களைகட்டியது. |