SIVAKASI WEATHER
விரைவில் சரவெடி தான்

29-01-2022
சிவகாசி பக்கம் திரும்பிய ஸ்டாலின் பார்வை; விரைவில் சரவெடி தான்!

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகாசி மூன்று முக்கிய தொழில்களை நம்பியிருக்கிறது. அவை, பட்டாசு, தீப்பெட்டி, அச்சிடுதல் ஆகியவை ஆகும். இதில் பட்டாசு தொழில் இந்திய அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. நாட்டில் தயாராகும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு, கொரோனா ஊரடங்கு போன்ற நெருக்கடிகளால் பட்டாசு தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் ஏராளமானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

அதுமட்டுமின்றி பட்டாசு தயாரிக்கும் ரசாயனம் தொடர்பாகவும் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தங்களுடைய பிரச்சினைகளை தமிழக அரசுக்கு எடுத்துரைக்க சிவகாசி பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ப.கணேசன், முதுநிலைத் தலைவர் ஏ.பி.செல்வராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், சாத்தூர் எம்.எல்.ஏ ரகுராமன் ஆகியோர் உடனிருந்தனர். முதல்வரிடம் அளிக்கப்பட்ட மனுவில், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பேரியர் நைட்ரேட் ரசாயனத்தை பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 சதவீத அளவிற்கே உற்பத்தி நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 80 சதவீத தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சரவெடிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அதனை நம்பியிருந்த பெண் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கு தீர்வு காண வேண்டும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பட்டாசு வெடிக்க தடையில்லை என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கி தர வேண்டும். அப்படி செய்தால் தான் பட்டாசு தொழில் புத்துயிர் பெறும். பட்டாசு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதிட்டு தங்களது வாழ்வாதாரத்தை காக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் நல்ல பதிலையே சொல்லி அனுப்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Samayam The Times of India

News & Events
top