SIVAKASI WEATHER
இரட்டை நகராட்சிகள் சங்கமித்து உதயமான சிவகாசி மாநகராட்சி

12-02-2022
இரட்டை நகராட்சிகள் சங்கமித்து உதயமான சிவகாசி மாநகராட்சி

இரட்டை நகரங்கள் என்ற சிறப்பை பெற்ற ஊர்கள் அரிதானவை.. ஆமதாபாத்-காந்திநகர், ஐதராபாத்-செகந்திராபாத், கொச்சி-எர்ணாகுளம் என்ற வரிசையில் தென்தமிழகத்தில் சிவகாசி-திருத்தங்கல், நெல்லை-பாளையங்கோட்டை ஆகியவற்றை குறிப்பிட்டாக வேண்டும்.

இதில் இரட்டை நகரங்களான சிவகாசியும், திருத்தங்கலும் இரட்டை நகராட்சிகளாக தனித்தனியே இயங்கி வந்து, இப்போது ஒரு குடையாக மாநகராட்சியாக உருவெடுத்து முதல் மாநகராட்சி தேர்தலை சந்திக்க இருக்கிறது.
அந்த இருநகராட்சி மக்களுக்கும் இது ஓர் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இந்த நேரத்தில் சிவகாசி நகரின் பெருமைகளையும், அந்த இருநகராட்சிகளின் சிறப்புகளையும் இங்கே நாம் கண்ணோட்டமாக கண்டு வரலாம்... வாருங்கள்...!

பட்டாசு-தீப்பெட்டி தொழில்
பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்களில் சிறந்து விளங்கும் சிவகாசி நகரை முன்னாள் பிரதமர் நேரு, ‘குட்டி ஜப்பான்’ என்று செல்லமாக அழைத்தார்.
மொத்த பணியாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் தினக்கூலிகளாக உள்ள ஒரே நகரம் சிவகாசி தான்.

பல நூறு ஆண்டு கால வரலாற்று பெருமை சிவகாசிக்கு உண்டு. மதுரையை ஆண்ட ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சி காலத்தில் அவருடைய ஆட்சி எல்லையின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்ததாக கூறுகிறார்கள்.

பாண்டிய அரசன் ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன் காசி என்று அழைக்கப்படும் வாரணாசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து, இங்கு நிறுவியதால் காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று ஊர் அழைக்கப்படுகிறது.

பின்னர் வந்த பாண்டிய மன்னர்களும், திருமலைநாயக்கரும் அந்த கோவிலை மிகப்பெரியதாக கட்டினர். காசி விசுவநாதசுவாமி கோவில் என்று அந்த திருத்தலம் அழைக்கப்பட்டு வருகிறது.

100 ஆண்டுகள்
சிவகாசி நகராட்சியின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், கடந்த 1920-ம் ஆண்டு நகராட்சியாக உருவானது.

1978-ம் ஆண்டு 2-வது நிலை நகராட்சியாகவும், அதே ஆண்டில் முதல் நிலை நகராட்சியாகவும், 1998-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013-ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாகவும் தரம் உயர்ந்தது. கடந்த ஆண்டு, 24.8.2021 அன்று மாநகராட்சியாக தரம் உயர்ந்தது.

1920 முதல் 2020 வரை சரியாக 100 ஆண்டுகள் நகராட்சியாக இருந்த பெருமையும், 101-வது ஆண்டில் மாநகராட்சியாக தரம் உயர்ந்ததும் சிவகாசி நகருக்கு உரித்தான மற்றொரு சிறப்பு.

நகராட்சியாக இருந்த 100 ஆண்டுகளில் சிவகாசியில் மொத்தம் 23 பேர் தலைவர்களாக மக்கள் பணியாற்றி உள்ளனர். இப்போது மாநகராட்சியாகி முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

கம்பீரமான கட்டிடம்
சிவகாசி நகராட்சி 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் அதற்கான தனி கட்டிடம் கடந்த1951-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் அப்போதைய முதல்-அமைச்சர் பி.எஸ்.குமாரசாமிராஜா கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நீண்ட காலம் அதில்தான் நிர்வாக பணிகள் நடந்து வந்தன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசியில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் நகராட்சிக்கு புதிய அலுவலகம் சகல வசதிகளுடன் கட்டப்பட்டது. இந்த அலுவலகம் கட்டிய போது சிவகாசி நகராட்சியை விரைவில் மாநகராட்சியாக அரசு தரம் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு, அதற்கு தேவையான வகையில் கட்டிடம் அமைக்கப்பட்டது.

தற்போது அந்த புதிய கட்டிடத்தில் தான் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

எல்லைகள்
தரம் உயர்த்தப்பட்ட சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி மற்றும் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், தேவர்குளம், சாமிநத்தம், பள்ளப்பட்டி, நாரணாபுரம், அனுப்பன்குளம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம் ஆகிய 9 பெரிய பஞ்சாயத்துக்களை சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது.

அதற்கானஅனைத்து அனுமதிகளும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது சிவகாசி, திருத்தங்கல் 2 நகராட்சி பகுதிகளை மட்டும் சேர்த்து புதிய மாநகராட்சி பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது 56 சதுரகிலோ மீட்டர் பரப்பு கொண்டது. இதற்கென 48 வார்டுகள் கொண்ட புதிதாக வரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் தொழிலாளர்கள்
போதிய விவசாயம் இன்றி தவித்த சிவகாசி நகர மக்களின் வாழ்வாதாரம் காக்க இங்கு தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது. சுமார் 90 ஆண்டு கால பாரம்பரியம் இந்த தொழிலுக்கு உண்டு. இந்த தொழிலை தொடர்ந்து அச்சகங்கள் தொடங்கப்பட்டன.

இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளில் 90 சதவீதம் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே போல் இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக போட்டி போடும் வகையில், இங்கு அச்சு தொழிலும் சிறந்து விளங்குகிறது. காலண்டர், டைரி, புத்தகம், அட்டை பெட்டிகள் தயாரிப்பிலும் சிவகாசி நம்பர்-1 தான்.

பல நகரங்களில் மாவட்ட தலைநகரங்கள் மாநகராட்சியாக இருக்கும் போது, மாவட்ட தலைநகர் அந்தஸ்து இல்லாத சிவகாசியை மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த மாநகரம் வளர தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி மக்களிடம் உள்ளது. இவற்றை வாக்குறுதிகளாக அளித்து கட்சிகள் பிரசார களத்தில் குதித்து உள்ளன. பலமுனை போட்டி இருப்பதால், பிரசார களத்தில் அனல் பறக்கிறது.

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள கவுன்சிலர்கள், மேயர், துணை மேயரை வரவேற்க மாநகராட்சி புதிய அலுவலகமும் தயாராக உள்ளது.

இரட்டை நகராட்சிகள் சங்கமித்து சிவகாசி மாநகராட்சி உதயமானது.

- DailyThanthi


News & Events
top