SIVAKASI WEATHER
சிவகாசியை மிகப் பெரிய தொழில் நகரமாக மாற்றிய சண்முக நாடார்

05-03-2023
சிவகாசியை மிகப் பெரிய தொழில் நகரமாக மாற்றிய சண்முக நாடார் வரலாறு

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு சிவகாசி என்கிற நகரம் இன்றைக்கு இருப்பதில் ஆயிரத்தில் ஒரு மடங்கு கூட இல்லை. ஏறக்குறைய கிராமமாக இருந்த அந்த ஊரில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்தது.

கயிறு திரிப்பது, மண் பானை செய்வது, பால் மாடு வளர்ப்பது என சின்னச் சின்ன தொழில்களைச் செய்து பலரும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் சிவகாசியில் இரண்டு இளைஞர்கள் புதிய கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களில் ஒருவர் அய்ய நாடார். அவருக்கு அப்போது 17 வயது. இன்னொருவர், சண்முக நாடார். இவருக்கு அப்போது 19 வயது. அய்ய நாடாரின் தந்தையார் பழனியப்ப நாடாரும், சண்முக நாடாரின் தந்தையார் ஆறுமுக நாடாரும் உடன்பிறந்த சகோதரர்கள்.

இந்த இளைஞர்களின் உறவினர் ஒருவர், பத்திரிகையில் வந்த செய்திக் கட்டுரை ஒன்றை அவர்களிடம் காட்டினார். தீப்பெட்டி தயாரிப்பது எப்படி என்பது பற்றியும், அதில் பயன்படுத்த ப்படும் தொழில்நுட்பம் பற்றியும், எதிர்காலத்தில் தீப்பெட்டியின் பயன்பாடு எப்படி இருக்கும் என்பது பற்றியும் விளக்கமாக அந்த கட்டுரையில் எடுத்துச் சொல்லப்பட்டிருந்தது.

கட்டுரையைத் தந்த உறவினர், ''நீங்கள் இருவரும் கொல்கத்தாவுக்குப் போய் தீப்பெட்டி தயாரிப்பைப் பற்றி கற்று வரலாமே!'' என்று யோசனை சொன்னார். அவரது யோசனையைக் கேட்டு, சகோதரர்கள் இருவரும் கொல்கத்தாவுக்குப் புறப்பட்டனர்.

இது நடந்தது 1922-ல். அப்போது ரயில் வசதி பெரிய அளவில் இல்லை. தவிர, அவர்களுக்கு கொல்கத்தா என்பது புதிய பிரதேசம். அங்கு அவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களுக்கு வங்காள மொழி தெரியாது. இப்படி பல பிரச்னைகள் இருந்தும் அவர்கள் தயங்கி நின்றுவிடவில்லை. சென்னை வழியாக கொல்கத்தாவுக்குப் போய், அங்கு பல மாதங்கள் தங்கி இருந்து, தீப்பெட்டி தயாரிப்பு பற்றிய அத்தனை தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொண்டனர்.

கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கொல்கத்தாவில் இருந்து பல பயிற்சிகளைப் பெற்றவர்கள் 1923-ல் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலை ஆரம்பித்தனர்.

சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை தந்ததன் மூலம் உற்பத்திச் செலவும் குறைந்தது. மக்களுக்கு வேலை கிடைத்து, அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.

இந்த தீப்பெட்டி நிறுவனம் நல்ல வளர்ச்சி காணவே, அடுத்து பட்டாசு தயாரிப்பதிலும் இறங்கினார்கள் அய்ய நாடார் - சண்முக நாடார் சகோதரர்கள். அந்த பிஸினஸும் வெற்றி வாய்ப்பைத் தரவே, அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக சகோதரர்கள் தங்கள் பிஸினஸை தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள முடிவு செய்தார்கள்

தீப்பெட்டி தயாரிப்பை சண்முக நாடாரும், பட்டாசு தயாரிப்பை அய்ய நாடாரும் எடுத்துக்கொள்ள முடிவானது. தனியாகப் பிரிந்த சண்முக நாடார் தனது நிறுவனத்திற்கு ஸ்ரீ காளீஸ்வரி என்று பெயர் வைத்தார். தீப்பெட்டிகளை செய்யும் தொழிலில் அவருக்கு இருந்த ஈடுபாடு அதிகரிக்கவே, அந்த பிஸினஸும் பெருகியது.

பிற்பாடு பட்டாசு தயாரிப்பிலும் இறங்கி பெரும் வெற்றி கண்டார். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு என தீப்பெட்டித் தொழிற்சாலைகளை ஆரம்பித்தவர், பிற்பாடு பல தொழிற்சாலைகளை ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் 41 தொழிற்சாலைகள் மிகப் பெரும் நிறுவனமாக மாறியது.

இன்றைக்கு ஸ்ரீ காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனத்தில் 6,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.

பிஸினஸில் வெற்றிகண்ட சண்முக நாடார், அடுத்து சமூக வாழ்க்கையிலும் ஈடுபட ஆரம்பித்தார். குறிப்பாக, அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 1952-55 வரை சிவகாசி முனிசிபாலிட்டியின் தலைவராக இருந்தார். சிவகாசி நகரம் பொருளாதார தன்னிறைவை அடைவதற்கும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஒழிவதற்கும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார்.

அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்து கல்விச் சேவையிலும் ஈடுபட ஆரம்பித்தார் சண்முக நாடார். காளீஸ்வரி கலைக் கல்லூரி இன்றும் சிவகாசியில் முக்கியமான கல்லூரியாக இருக்கிறது.

1969-ல் சண்முக நாடார் இறந்து போனாலும் அவரது ஐந்து மகன்களும், ஒரு மகளும் அவர் ஆரம்பித்த நிறுவனத்தை பல்வேறு நிறுவனங்களாக உயர்த்தி வருகின்றனர். பட்டாசு தயாரிப்பு, மெட்டல் பவுடர் தயாரிப்பு, போக்குவரத்து, அச்சுத் தொழில், ஹோட்டல், நிர்வாக கல்லூரி என பலவாறாக பெருகி இருக்கிறது.

சிவகாசியை மிகப் பெரிய தொழில் நகரமாக மாற்றிக்காட்டிய சண்முக நாடாரை சிவகாசி என்றும் மறக்காது!


News & Events
top