இறந்த மனைவிக்கு கணவர் வைத்த சிலை |
26-05-2023 சிவகாசியில், இறந்த மனைவிக்கு கணவர் வைத்த சிலிக்கான் சிலை சிவகாசியில், இறந்த மனைவியின் 'சிலிக்கான்' சிலையை, அவரின் நினைவு நாளில் வைத்து, குடும்பத்தினருடன் கணவர் நினைவு கூர்ந்தார். சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்த தொழிலதிபர் நாராயணன், 70. இவரின் மனைவி ஈஸ்வரி எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இதனால் தனிமையில் இருந்த நாராயணன், மனைவியின் நினைவாக இருந்தார். மனைவிக்கு சிலிக்கான் சிலை செய்ய, பெங்களூரு தனியார் நிறுவனத்திடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 'ஆர்டர்' செய்தார். தத்ரூபமாக, உண்மையான உருவம் போல உருவாக்கப்பட்ட அந்த பெண்ணின் சிலையை, அவரது நினைவு நாளான மே 23ல் வீட்டில் அமைத்து நாராயணன் நினைவுகூர்ந்தார். இதில், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர். மேலும், எளிதில் துாக்கிச் செல்லும் வகையிலான அந்த சிலையை, வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் வைத்துள்ளார். மேலும், வாசலில் 2 லட்சம் ரூபாய் செலவில் மனைவியின் வெண்கல சிலையையும் வைத்துள்ளார். நாராயணன் கூறியதாவது:மனைவியின் நினைவு என்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக 9 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிலையை செய்தேன். இதனால் வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷ நிகழ்ச்சிகளிலும் மனைவி பங்கேற்கிறார் என்ற மன நிறைவு ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். |