சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் மும்முரம் |
15-09-2024 சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் மும்முரம் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க பிப். 26ல் சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே மேம்பால பணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். சிவகாசி பெரியகுளம் கண்மாய் இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் நிறுத்தம் வரை 700 மீட்டர் நீளத்திற்கு 12 மீட்டர் அகலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.61.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலை துறை சார்பில் ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஆக. 17ல் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே ரயில் தண்டவாளம் மேலே பாலம் அமைப்பதற்காக ரயில்வே துறை சார்பில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது. நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டுமான பணிகள் தொடங்கிய ஒரு மாதத்திற்கு உள்ளாகவே மொத்தமுள்ள 17 பில்லர்களில் 8 பில்லர்களுக்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் ரயில் தண்டவாளம் மேலே பாலம் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் (சிறப்பு திட்டம்) ஜெகன் செல்வராஜ் கூறுகையில், ரயில் தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 துாண்கள், மேற்கு பக்கம் 6 தூண்கள் என மொத்தம் 17 துாண்களுடன் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. கிழக்கு பக்கத்தில் 8 துாண்களுக்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ரயில் தண்டவாளத்திற்கு மேலே ரயில்வே கட்டுமான பிரிவு சார்பில் பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இணைப்பு பணிகளை ரயில்வே துறை, நெடுஞ்சாலைதுறை இணைந்து மேற்கொள்ளப்படும், என்றார். |